No icon

இறைவேண்டலின்  பரிமாணங்கள் – 20

அமைதியில் இறைவேண்டல்

பேசுவதற்கு ஒரு காலம்; பேசாதிருப்பதற்கு ஒரு காலம்” (சஉ 3:7) என்கிறார் சபை உரையாளர். மனிதரோடு உறவாடுகையில், சில நேரங்களில் நாம் பேசவேண்டும்; சில நேரங்களில் நாம் பேசாதிருக்கவும் வேண்டும். “பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்” (நீமொ 17:28) என்கிறது நீதி மொழிகள் நூல். இதுவே ஞானம்; இதுவே உறவை வளர்க்கும் உத்தி.

இறைவனோடு கொள்ளும் உறவாடலாகிய இறைவேண்டலிலும் இத்தகைய வேறுபாடுகள் இருக்கின்றன. சொற்களைக் கொண்டு இறைவேண்டல் செய்வதற்கு ஒரு காலமென்றால், சொற்களின்றி அமைதியில் இறைவேண்டல் செய்வதற்கும் தேவை இருக்கிறது. அதற்கான  வாய்ப்புகளும் உள்ளன.

எப்படி நாம் நின்றுகொண்டு, அமர்ந்துகொண்டு, முழந்தாளிட்டு வழிபாட்டில் கலந்துகொள்கிறோமோ, அதுபோலவே சில வேளைகளில் குரலெழுப்பியும், சில வேளைகளில் அமைதியிலும் நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும்.

இறைவாக்கினர் எலியாவைஎன் திருமுன் வந்து நில்என்று கடவுள் அழைத்தபோது, சுழற்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியன எழுந்தன. ஆனால், அவற்றில் ஆண்டவர் இருக்கவில்லை. அதற்குப் பின்அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது’ (1அர 19:12); அதில்தான் எலியா இறைவனைச் சந்தித்தார். அதுபோலவே, சில வேளைகளில் ஆர்ப்பாட்டமான வழிபாடுகளிலோ, ஆரவாரமான இறைவேண்டலிலோ சந்திக்க முடியாத இறைவனை, உள்ளத்தின் ஆழ்ந்த அமைதியிலும், நமக்குள்ளே அவர் பேசும் மெல்லிய ஒலியிலும்தான் கண்டுகொள்ள முடியும். எனவேதான், ‘அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள்’ (திபா 46:10) என்னும் திருப்பாடல் வரிகளில் ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

சில வேளைகளில் நாம் ஆர்ப்பரித்து, ஆரவாரத்துடன் குரலெழுப்பி ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்பது உண்மையே. ஆனால், எல்லா வேளைகளிலும் அல்ல என்னும் ஞானத்தை மறந்து விடக்கூடாது. சில வேளைகளில் இரைச்சலும், ஆரவாரமும் தேவையற்றவை, அமைதியே தேவை. எனவேதான், “என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள்; உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன்” (ஆமோ 5:23) என்று இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக ஆண்டவர் அறிவித்தார். அது மட்டுமல்ல, “உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள்” (மலா 2:17) என்னும் அறிவுரை நம்மை வியப்படையச் செய்கிறது.

அமைதியின் கனி இறைவேண்டல்என்பது அன்னை தெரேசாவின் ஒரு புகழ்பெற்ற பொன் மொழி. அமைதியின் ஆழத்தில்தான் ஆண்டவரை நாம் ஆழமாக உணர முடியும். எனவேதான், குழந்தை போன்ற மனநிலை கொண்ட இறையடியார், “என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது” (திபா 131:2) என்கிறார்.

திரு அவையின் எல்லாப் புனிதர்களும் அமைதியில் ஆண்டவரோடு உறவாடியவர்களே. சிறப்பாக, திரு அவையின் தொடக்கக் காலத்தில் வனாந்தரத்திலும், பாலைநிலத்திலும் புனித வனத்து அந்தோணியார், புனித வனத்துச் சின்னப்பர் போன்ற புனிதர்கள் அமைதியில் ஆண்டவரை எதிர்கொண்டனர். அவர்களைப் போல புனித அவிலா தெரேசா, பிங்கன் ஹில்டகாட், சியன்னா கத்தரீன், பிரிஜிட் போன்ற மறையனுபவப் புனிதர்களும் (mystics) அமைதிக்குத் தங்கள் இறைவேண்டலில் அதிக அழுத்தம் கொடுத்தவர்கள்.

புனிதர்கள் வாழ்வில் மட்டுமல்ல, நம் அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும், அமைதிக்கு ஓர் இடமிருக்க வேண்டும். ‘அமைதியாய் இருப்பதே ஓர் இறைவேண்டல்தான்என்னும் புரிதல் நமக்குத் தேவை. இன்று பல இல்லங்களிலும் இரவில் தொலைக்காட்சியின் ஓசை, திறன் பேசிக் காணொளிச் சந்தடிகள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. துறவற இல்லங்களிலும், குருத்துவப் பயிற்சி இல்லங்களிலும் இரவு இறைவேண்டலுக்குப் பிறகுபெரிய அமைதி’ (Grand Silence) கடைப்பிடிக்கப்படுகிறது. நமது இல்லங்களிலும் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அமைதி நிலவும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். வெளியரங்க அமைதியே பல வேளைகளில் உள்ளார்ந்த அமைதிக்கு இட்டுச் செல்லும்.

நமது வழிபாட்டுத் தலங்களிலும் அமைதி வேண்டலுக்கு இடமிருக்க வேண்டும். எனவேதான், இன்று பல பங்குகளில் நற்கருணைச் சிற்றாலயங்கள் உருவாக்கப்பட்டு, அங்கே பலரும் அமைதியில் இறைவேண்டல் செய்யும் நற்பழக்கத்தைக் காண்கிறோம். நமது திருப்பலி மற்றும் இதர வழிபாடுகளிலும் அமைதி வேண்டல் இருக்க வேண்டும் எனத் திருவழிபாட்டு ஒழுங்கு ஊக்குவிக்கிறது. அமைதி இறைவேண்டலுக்கும், நம் வாழ்வை அலசிப் பார்க்கும் ஆன்ம ஆய்வுக்கும் நமது கோவில்களில் நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்கிறது கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி (எண்: 1185).

விளக்கம் கூறுபவர் இல்லையெனில் அவர்கள் திருச்சபையில் அமைதி காக்கட்டும்; தங்கள் உள்ளத்தில் கடவுளோடு பேசட்டும்” (1கொரி 14:28) என்னும் வியப்பான வரிகள் தொடக்கத் திரு அவையின் வழிபாடுகளிலும் அமைதி வலியுறுத்தப்பட்டது என்பதை எடுத்துரைக்கிறது. எனவே, நமது வழிபாடுகளிலும் நாம் அமைதி காத்து, உள்ளத்தில் கடவுளோடு உரையாடுவோமாக! “ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு” (திபா 37:7) என்கிறது திருப்பாடல். அதுவே ஓர் இறைவேண்டல்தான் என்பதை உணர்ந்து ஒழுகுவோம்!

(தொடரும்)

Comment