No icon

கண்டனையோ, கேட்டனையோ!

இன்னொரு தலையும் இரண்டு கைகளும்

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் மேனாள் பேராயர் சின்னப்பா, பெசன்ட் நகர் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்ஆரோக்கியத் தாயே ஆதாரம் நீயேஎன்ற பாடலைப் பாடும் அழகிய காணொளி ஒன்றை அண்மையில் பார்த்து, கேட்டு இரசித்தேன்.

பேராயர் ஓர் இசை ஆர்வலர். இசை நுட்பங்கள் அறிந்தவர். தமிழ் கிறிஸ்தவ இசையைச் சனநாயகப்படுத்தி, முன்னெடுத்துச் சென்ற பெரிய மனிதர்களில் ஒருவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஏதோ ஒரு விழாத் திருப்பலியில் கலந்துகொள்ள பேராயர் வந்தார் (எந்த இடம் என்பது மறந்து விட்டது). அங்கே மொட்டை வெயிலில் நின்று, ஒரு பேண்ட் வாத்தியக் குழுவினர் மாதா பாடல்கள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். நான் அப்போது குருமாணவன். நாற்காலிகளை வரிசையில் போட்டு, துணி வைத்து துடைத்துக் கொண்டிருந்தோம். வாத்தியக் குழுவின் பக்கத்திலேயே காரை நிறுத்தி இறங்கிய பேராயர், பேண்ட் மாஸ்டரிடமிருந்து  குச்சியை (baton) வாங்கிக்கொண்டு, அவர் குழுவை வழிநடத்த ஆரம்பித்தார். கச்சேரி களைகட்டியது. மக்கள் கூட்டமாகச் சுற்றிநின்று பார்த்தார்கள். நாங்கள் நாற்காலிகளைத் துறந்தோம். அது ஒரு விநோத அனுபவம்!

கிறிஸ்தவப் பாடல்களில் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வாசிக்கப்படும்interludeஎன்கிற இடையிசைத் துணுக்கு ஒழுங்கமைவோடு இருப்பதில்லை என்ற ஒரு புகார் அவரிடம் இருந்தது.  “கீபோர்டு வாசிக்கிற ஆளு ஏதோ ஒரு  பீசை கெக்கெபிக்கே என்று வாசித்து விட்டு, கடைசியில தண்ணி தெளிச்ச  மாடு மாதிரி, தலைய ஓர் ஆட்டு ஆட்டுவான். பிள்ளைகள் உடனே சரணத்தைப் பாடணும். வாசிச்ச துணுக்கிற்கும், சரணத்தின் மெட்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காதுஎன்று ஒருமுறை அவர் கிண்டலாகக் கூறியது ஞாபகம் இருக்கிறது.

பேராயர் சின்னப்பாவிற்கு வயது 87. திருத்தந்தையின் வயது. காணொளியில், “நான் எப்போது இங்கு வந்தாலும் ஒரு பாட்டு பாடுவேன். அடுத்த வருடம் நான் உயிரோடு இருப்பேனா என்று சந்தேகமாக இருக்கிறது. நான் பல கட்டங்களைத் தாண்டிவிட்டேன். ஆகவே, என் நன்றியறிதலாகவும், உங்கள் குடும்பங்களுக்கு அர்ப்பணமாகவும் இந்தப் பாடலை அரங்கேற்றம் செய்ய விரும்புகிறேன்என்று சொல்லி நெகிழ்வாக ஆரம்பிக்கிறார். இசைக்கருவியாளர்களுக்கு ஆணைகள் கொடுக்கும்போது சிரிப்பு மறைந்து, முகம் ஒரு நிபுணரின் தீவிரத்தை அடைகிறது. “சாருகேசி ராகம். ஆறரைக் கட்டைல பிடிஎன்று சொல்கிறார். அவரும் பிடிக்கிறார். நாம் என்ன கட்டையைக் கண்டோம்? சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, “அவ்வளவுதான். கார்ட்ஸ் கீட்செல்லாம் பிடிக்காதேஎன்று கறார் காட்டுகிறார். தபேலா  வாசிப்பவரிடம் தாளத்தைச் சொல்லி, “மெதுவாக வாசிஎன்கிறார். தாளத்தின் பெயரும், சாருகேசி இராகத்திற்கும், ஹிந்துஸ்தானி இசை வடிவத்திற்கும் உள்ள நட்பு குறித்து அவர் சொல்லும் தகவலும் இசைப் பாமரனான எனக்கு விளங்கவில்லையென்றாலும், காணொளியை இரசிக்க அது தடையாக இல்லை.

சற்று நேரம்தனநதனனதனதனன.....’ என்று தயார் ஆகி, ‘ஆரோக்கியத் தாயே, ஆதாரம் நீயேஎன்று அவர் வெண்கலக் குரலில் ஆரம்பிக்கும்போது, கூடவே தபேலாவும், கீபோர்டும் செல்லப் பிராணிகள் போல ஓடிவந்து, உறுத்தாமல் ஒட்டிக்கொள்கின்றன. அதன்பின் நிகழ்வது ஒரு மகத்தான கலை, இறை அனுபவம் என்று தயக்கமில்லாமல் சொல்வேன்.

தன் குரல்மீது அபார நம்பிக்கை உள்ள ஒருவரால்தான், பேராயர் போல மைக்கிலிருந்து அத்தனை ஆரோக்கியமான தொலைவில் நின்று கொண்டு பாடமுடியும். குறைந்தது அரை அடியாவது இருக்கும். இடையிடையேபாடு’, ‘சொல்லுஎன்று கூட்டத்திற்கு ஒருமையில் செல்ல மிரட்டல்கள் விடுக்கிறார்அரசியல் சரிகள் பற்றிக் கவலைப்படாமல், இயல்பாகப் பேசக்கூடிய உரிமையைதகுதியும், வயதும் பேராயருக்குத் தந்திருக்கின்றன. சரணம் முடிந்து பல்லவிக்குத் திரும்பும்போது, பிரமித்து உட்கார்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘பாடேன்என்று அவர் செல்லமாகக் கோபிக்கும்போது, பெண்கள் முக்காடை இழுத்து விட்டுக்கொண்டு, குனிந்து சிரிக்கிறார்கள். சிரிப்பு அகலாமல் சேர்ந்து பாடுகிறார்கள். நம் வீட்டில் தாத்தா பேசுவதுபோல இருக்கிறது.

அலைபாயும் காட்சிகள் இல்லாமல், பெரும்பாலும் பேராயர் மேல் நிலைத்திருக்கும் கேமிராக் கோணங்களைக் கொண்டே, காணொளியைக் கோர்த்திருக்கும் எடிட்டர் தம்பிக்கு () தங்கைக்குப் பாராட்டுகள். காணொளியில் வெளிப்படும்  பேராயரின் உடல் மொழி, ஓர் உண்மையான மரியின் அடியாரின் உடல்மொழி. ஒரு மூத்தத் தமிழ் கத்தோலிக்கர், அருள்பணியாளர், கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழ்நாடு திரு அவை வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த தாக்கம் செலுத்தி ஓய்வு பெற்றிருக்கும் ஒரு பேராயர் பெருங்கிழவனார் இத்தனை பற்றுதலோடு அன்னையைப் புகழ்ந்து பாடும்போது, அதைப் பார்க்கும் எல்லாருடைய நம்பிக்கையும் ஒரு நகர்வைச் சந்திக்கிறது.

எனக்குக் காணொளி கிடைத்த அந்த நாளில், பலமுறை அதை நான் திரும்பத் திரும்பப் பார்த்தேன். என் நண்பர்களுக்கும் பகிர்ந்தேன். இப்போதுபலமுறை பகிரப்பட்ட காணொளிஎன்ற அந்தஸ்தைவாட்சப்இதற்குக் கொடுத்துள்ளது. 25,000 பேர் இதை மாதா டிவி You Tube சானலில் பார்த்திருக்கிறார்கள். காணொளியைக் காண்பதற்கான கொழுவி: https://youtu.be/EIYFmzklv2Y

பேராயர் இதே பாடலைப் பாடி, மாதா டிவியால் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு தொழில்முறை காணொளியும் இணையதளத்தில் கிடைக்கிறது. எனினும், எனக்கு அதைவிட இந்த வடிவமே அதிகம் பிடித்திருக்கிறது. காரணம், இதில் உள்ள நேரடித்தன்மை. எடிட்டிங், ஒப்பனைகள் எதுவும் இல்லாமல், எப்படி நிகழ்ந்ததோ அப்படியே பதியப்பட்டு, பகிரப்பட்டுள்ள அதன் இயல்பு. இது காணொளியின் நம்பகத்தன்மையைக் கூட்டி, மனதுக்கு இன்னும் நெருக்கமாக்குகிறது. பாடலின் முடிவில், “எல்லாரும் மாதாவுக்கு ஜோரா ஒருமுறை கைதட்டுங்கஎன்கிறார் பேராயர். அப்போது மாதாவும், பேராயருக்காக ஜோரா ஒருமுறை கைதட்டியிருப்பார்கள்

பேராயர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும். ஆண்டுதோறும் பெசன்ட் நகர் திருத்தலத்திற்கு வந்து இந்தப் பாடலைப் பாடி, ஆரோக்கிய அன்னையை மகிழ்விக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். பேராயருக்கு என் அன்பும் வாழ்த்தும்!

ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு, ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாகக் காலியாக இருந்த தஞ்சை மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயராக மேதகு சகாயராஜ் தம்புராஜ் அவர்கள் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 18-ஆம் தேதி தஞ்சாவூர் திரு இருதய ஆண்டவர் மறைமாவட்டப் பேராலயத்தில் நடந்த ஒரு நேர்த்தியான அருள்நிகழ்வில், பொறுப்பேற்றார்.

புதிய  ஆயர் திருச்சி மறைமாவட்ட அருள்பணியாளராகப் பணியாற்றியவர். பணி வாழ்வின் பெரும் பகுதியைப் பங்குத்தளங்களில் செலவழித்தவர். ஏழைகளின் மேல் அன்பும் கரிசனையும் கொண்டவர். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் மதிப்பீடுகள் குறித்தும், அவர் இதுவரை நிகழ்த்தியுள்ள சமூக முன்னேற்ற முன்னெடுப்புகள் குறித்தும்நம் வாழ்வுவெளியிட்ட சிறப்பு மலரிலும், திருப்பொழிவு தினத்தன்று செங்கல்பட்டு ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் மிகக் கச்சிதமான வார்த்தைகளில் வாசித்தளிக்கப்பட்ட ஒரு முன்னுதாரண வாழ்த்துரையிலும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. பதவியேற்புக்குப் பின் கவனித்த வகையில், புதிய ஆயர் ஒரு விவிலிய அன்பர். தன் மறையுரைகளைப் பெரும்பாலும் விவிலியச் சொற்கள் கொண்டே கட்டமைக்கிறார். அவருக்கு இலக்கியம் பிடித்திருப்பது ஓர் இனிய ஆச்சரியம். மறைமாவட்ட குருக்கள் எங்களுக்கு வழங்கிய அறிமுக உரையில், புதிய ஆயர் மேற்கோள் காட்டிய அமெரிக்கக் கவிஞர் Robert Frost-‹, ‘the road less travelled’ and ‘miles to go before I sleepஎன்ற இரண்டு பிரபல கவிதை வரிகளும்அவருடைய புதிய ஆயத்துவத்தின் அக்கறைகள் மற்றும் செல்லவிருக்கும் திசைகள் குறித்து, ஏதோ ஒரு வகையில் ஆருடம் சொல்கின்றன.

வேலுத்தம்பி தளவாய் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருகின்றீர்களா? 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவிதாங்கூர் மாகாணத்தின் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தளவாய் மற்றும் தளபதியாக ஆட்சி செய்தவர். நாஞ்சில் நாட்டு களரி வீரர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய ஆட்சியாளர்களில் ஒருவர். அவர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தமிழின் முதன்மை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியபோழ்வுஎன்ற ஓர் அழகிய சிறுகதை இருக்கிறது. அதில், வேலுத் தம்பி பிறந்தபோது நடந்ததாகப் பின்வரும் நிகழ்வைக் கதையாசிரியர் சித்தரிக்கின்றார்.

அது 1765-ஆம் ஆண்டுதலக்குளத்தில், குஞ்ஞுமாயூட்டிப் பிள்ளைக்கும், வள்ளியம்மைத் தங்கச்சிக்கும் மகனாக வேலுத்தம்பி தளவாய் பிறந்தார். அந்த ஆண்டுதான் இராஜா கேசவதாஸ் திருவிதாங்கூரின் இராயசம் ஆக பதவியேற்றார். அந்த ஆண்டிலேயே ஒருமுறை இராஜா கேசவதாஸ் பத்மநாபபுரத்திற்கு வந்திருந்தார். குஞ்ஞுமாயூட்டிப் பிள்ளையும், வள்ளியம்மைத் தங்கச்சியும் அவருக்குத் தங்கள் மூன்றுமாதக் குழந்தையைக் காட்ட விரும்பினார்கள். அதற்குஅரசரை முகம்காட்டல்என்று பெயர்மலர், கனி, நெல், உடைவாள், பொன் என்று ஐந்துவகை மங்கலங்களை அரசர் முன் படைத்து வணங்கினார்கள். அதற்குதிருமுன் காட்சிவைப்புகள்என்று பெயர்.

பிறகு குழந்தையை மகாராஜாவின் காலடியில் வைத்துவிட்டு, அவனுடைய தந்தை குஞ்ஞுமாயூட்டிப்பிள்ளை அரசரைப் பார்த்து இவ்வாறு சொன்னாராம்: “தங்கள் சேவைக்காக இதோ இன்னொரு தலையும் இரண்டு கைகளும், தம்புரானே.”

என்னே ஓர் அழகிய வாக்கியம்!

புதிய ஆயர் சகாயராஜ் தம்புராஜ் குறித்தும் நாம் கடவுளிடம் இதே வார்த்தைகளைச் சொல்லலாம்.

தமிழ்நாடு திரு அவையை முன்னெடுத்துச் செல்லும் உம் பணிக்காக இதோ இன்னொரு தலையும், இரண்டு கைகளும், தம்புரானே!”

புதிய ஆயருக்கு வாழ்த்துகளும், இறை வேண்டல்களும்!!

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

Comment