கண்டனையோ, கேட்டனையோ!
வானில் பறந்த துறவி
- Author ஜார்ஜி --
- Thursday, 24 Oct, 2024
செப்டம்பர் 23-ஆம் தேதி திரு அவை நினைவு கூரும் பாத்ரே பியோ என்னுடைய விருப்பப் புனிதர்களில் ஒருவர். நவீன காலத் திரு அவையின் புகழ் படைத்த ஆளுமை. பெரும்பான்மையான மற்ற புனிதர்கள் போலல்லாமல், இவரின் நிழற்படங்கள், குரல் பதிவுகள், காணொளிகள் நமக்குக் கிடைத்துள்ளன. நவீன உலகம் நேரில் கண்டு, கேட்டு, மலைத்த புனிதர் இவர்.
பாத்ரே பியோ நிறைவேற்றிய கடைசித் திருப்பலியைச் சுருக்கி, பாடல் கோர்த்து, ucatholic.com இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு கறுப்பு-வெள்ளை வீடியோ பின்வரும் கொழுவியில் காணக் கிடைக்கிறது: .
தளர்ந்த பியோவை இரண்டு துறவிகள் கைத்தாங்கலாக அழைத்து வந்து அமர்த்துகிறார்கள். மன்றாட்டுகளைச் சொல்லும் அவரின் குரலும், மக்களின் பதிலுரைகளும் நமக்குக் கேட்கின்றன. இதர நேரத்தில் பின்னணியில் அடக்கமாக ஒலிக்கும் பாடலில் மனம் தோய்ந்து போக, அதன் அர்த்தம் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான இந்தக் காணொளியை அமைதியில் நீங்கள் கண்டால், அதுவே ஓர் அழகிய இறைவேண்டல். அண்மையில் Catholic News Agency இணைய தளத்தில் வாசிக்கக் கிடைத்த ஒரு பயனுள்ள ஆங்கிலக் கட்டுரையை ஒட்டி, பாத்ரே பியோ குறித்த சில சுவாரசியமான தகவல்கள் ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்காக இதோ:
‘மாதா உன் கோவிலில்...’
பாத்ரே பியோ இத்தாலி நாட்டில் உள்ள பியட்ரெல்சீனா என்ற நகரில் 1887- ஆம் ஆண்டு, மே 25-ஆம் நாள் பிறந்தார். இயற்பெயர் ஃப்ரானிசிஸ்கோ ஃபொர்ஜோனே. பெற்றோர் ஏழை விவசாயிகள். குடும்ப வறுமை காரணமாக, பத்து வயது வரை ஆடு மேய்த்திருக்கிறார். பங்குக் கோவிலில் பீடப் பணியாளராக உதவி செய்தார். காவல்தூதர்கள், இயேசு, அன்னை மரியா போன்றோரைக் காட்சியில் கண்டு, அவர்களோடு உரையாடும் புதுமை செயலைத் தினமும் காலையில் விழித்தெழுந்து பல் துலக்குவதுபோல இயல்பாகச் செய்திருக்கிறார். இது மற்றவர்களுக்கு நடப்பதில்லை என்பதுகூட அப்போது அவருக்குத் தெரியாதாம்.
துறவற அவைக்குப் போக வேண்டும் என்ற ஆசையைப் பெற்றோரிடம் அவர் சொன்னபோது, அவருக்கு வயது ஐந்து! அந்த வயதில் நம் சிறுவர்கள் அழாமல் கோவிலுக்குப் போனால் பெரிய சாதனை!
‘உன் பேரைச் சொல்லத்தானே...’
ஃப்ரானிசிஸ்கோ கப்புச்சின் துறவற அவையில் நவ துறவியாகச் சேர்ந்தபோது அவருக்கு வயது 15. திருத்தந்தை புனித முதலாம் பயஸ் நினைவாக, ‘பியோ’ என்ற பெயரைச் சூடிக்கொண்டார். உள்ளூர் கோவிலில் புனித பயஸின் திருப்பண்டத்திற்கு முன்னால் ஃப்ரானிசிஸ்கோ ஒவ்வொரு நாளும் முழந்தாளிட்டு வேண்டும் பழக்கம் இருந்தது. முதல் உலகப் போர், இராணுவச் சேவை, உடல்நலக் குறைவு போன்ற பல தடைகளுக்குப் பின், 1910-ஆம் ஆண்டு அருள்பணியாளராகப் பட்டம் பெற்று சகோதரர் பியோ, ‘பாத்ரே’ பியோ ஆனார்.
‘பாத்ரே’ என்ற இத்தாலியச் சொல்லுக்கு ‘அருள்தந்தை’ என்று பொருள். பின்னர் இந்தப் பெயரே கிறிஸ்தவ உலகம் முழுவதும் பரவி நிலைபெற்றது. சில வருடங்கள் உடுப்பு அணிந்து வீட்டிலேயே இருந்தார். அந்நாள்களில் அவர் எழுதிய கடிதங்கள் ‘mystic’ வகையைச் சார்ந்தவை. 1916-ஆம் ஆண்டு கர்கானோ மலையில் அமைந்திருந்த ஒரு கிராமப்புற மடத்திற்கு மாற்றலாகிச் சென்றவர், அங்கேயே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1968, செப்டம்பர் 23-ஆம் நாள் இறக்கும் வரை இருந்தார்.
‘என்ன காயம் ஆன போதும்...’
திரு அவை வரலாற்றில் முதலில் ஐந்து காய மகிமை பெற்றவர் புனித பிரான்சிஸ் அசிசியார். இவரைத் தொடர்ந்து கேத்தரின் சியன்னா (14-ஆம் நூற்றாண்டு), அவிலா தெரசா (16-ஆம் நூற்றாண்டு) போன்ற பிரபலங்கள் இவ்வரத்தைப் பெற்றவர்கள். பெரும்பாலும் துறவியர்களே. இடையிடையே புனித ரீட்டா (15-ஆம் நூற்றாண்டு) போன்ற சில பொதுநிலையினருக்கும் இந்தப் பேறு கிடைத்திருக்கிறது.
‘ஐந்து காய வரம்’ வரலாறு, பிங்க் கலர் பேருந்து மாதிரி இருக்கிறது. பெரும்பாலும் பெண் பெயர்கள். இத்துறையில் அழகிய பாலினத்தவரின் ஆதிக்கம் குறித்து யாராவது இறையியல் ரீதியாக ஆய்வு செய்யலாம். 1918-ஆம் ஆண்டு, செப்டம்பர் 20-ஆம் நாள் ஒரு கோவிலில் வேண்டிக் கொண்டிருக்கும்போது, பாத்ரே பியோவின் உடலில் ஐந்து காயங்கள் தோன்றின. அவர் இறக்கும் வரை அவை வெளிப்படையாகத் தெரிந்தன. சிலுவையில் இயேசுவுக்கு இருந்தது போலவே இவருக்கும் - கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, இடையில் ஒன்று. பலகட்டச் சோதனைகளுக்குப் பின்னும் பியோவின் காயங்களை அறிவியலால் விளக்க முடியவில்லை. அச்சில் வார்த்து எடுத்தது போன்ற அவற்றின் சுத்தமான வட்ட வடிவம் மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
‘பூவெல்லாம் உன் வாசம்...’
பாத்ரே பியோவின் காயங்களிலிருந்து இரத்தம் கசிந்த வண்ணமாகவே இருந்தது. போட்டோக்களிலும், வீடியோக்களிலும் அவரின் கனத்த கையுறைகளுக்குக் கீழே இரத்தம் கோர்த்திருப்பது தெரியும். நோய்த்தொற்று ஏற்படாதது ஒரு புதுமை. காயங்களிலிருந்து ஒருவித மலர் வாசனை எப்போதும் வீசியதாம். சிலர் அதை ‘ரோஜா பூவின் மணம்’ என்று வர்ணித்தார்கள். வல்லுநர்கள் ‘odor of sanctity’ அதாவது, ‘புனிதத்தின் நறுமணம்’ என்று இந்த நூதனத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
‘மன்னிப்பாயா...’
பாத்ரே பியோ ஒரு நாளில் 12 மணி முதல் 15 மணி நேரங்கள் வரை ஒப்புரவு அருளடையாளத் தொட்டிலில் செலவழித்தார். அவரிடம் பாவ அறிக்கை செய்ய சிலர் இரண்டு வாரங்கள் கூட காத்திருந்தார்கள். அவரால் மனிதர்களின் இதயத்தைப் படிக்க முடிந்தது. பாவ அறிக்கை செய்பவர் தவற விட்ட (அல்லது மறைத்த) பாவங்களை, பியோ நினைவூட்டிச் சொல்ல வைப்பாராம். “ஒப்பரவு அருளடையாளம் என்பது ஓர் ஆன்மக் குளியல் போன்றது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஒருவர் ஒப்புரவு அருளடையாளத்தை அணுக வேண்டும். ‘நான் பாவம் எதுவும் செய்யவில்லை’ என்று நினைக்காதீர்கள். யாரும் தங்காத, தூய்மையான அறையில் கூட ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தால், தூசு சேர்ந்திருக்கும்” என்பது பியோ அடிக்கடிக் கூறிய அறிவுரை.
‘அடங்காத அசுரன்’
சிறு வயதிலிருந்தே பியோ பல்வேறு அமானுட ஆற்றல்களோடு போராட வேண்டியிருந்தது. பேய் அவரைப் பல வடிவங்களில் தாக்கியது. சில நேரம் ஒரு பெரிய கறுப்புப் பூனை போல; சில நேரம் அச்சுறுத்தக்கூடிய, பெயர் சொல்ல முடியாத ஒரு மர்ம விலங்கு போல.
பியோவின் உடல் தூய்மையைக் கெடுக்க ஒருமுறை பேய் ஆடையில்லாத அழகிய இளம் நங்கை வேடம் பூண்டு, அவர் முன் நடனமாடியதாம். இதில் மிக மோசம் என்னவென்றால், பேய் சில வேளைகளில், பியோவின் ஆன்மிக இயக்குநர் தோற்றத்திலும், ஏன் அன்னை மரியா, இயேசு, பிரான்சிஸ் அசிசியார் போன்றவர்களின் தோற்றங்களிலும் கூட வந்து சோதித்தான். பியோ ஏமாறவில்லை. பேயின் தாக்குதல்கள் ஒவ்வொன்றையும் வலிமையோடு எதிர்கொண்டு, அது வெற்றிக்கொள்ள முடியாத அசுரனாக பியோ இருந்திருக்கிறார்.
‘நீ எங்கே, நான் அங்கே...’
கடவுள் பாத்ரே பியோவுக்கு ‘bilocation’ எனப்படும், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் இருக்கும் வரத்தைக் கொடுத்திருந்தார். இன்றைய கணவர்களுக்கு மிக பயனுள்ள வரம்! பியோ அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். அதே நேரத்தில், சில துறவிகள் அவர் ஆலயத்தில் வேண்டிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் பல கண்டங்களில் பியோவை மக்கள் பார்த்ததாகவும் பதிவுகள் உள்ளன.
இரண்டாம் உலகப் போரின்போது நடந்த ஒரு வியப்பான நிகழ்வு இது:
தெற்கு இத்தாலி நாஜிக்களின் கையில் இருந்தது. அங்குதான் பாத்ரே பியோ வசித்து வந்த San Giovanni Rotondo நகரும் இருந்தது. ஜியோவானி நகர்மீது குண்டுகள் வீசி தாக்க உத்தரவு பெற்ற அமெரிக்க விமான வீரர்கள், நகரின் வான்பரப்புக்கு வந்து, ஆயுதக் கருவிகளை இயக்கத் தயாரானார்கள். அப்போது ஒரு விநோதக் காட்சி! ஒரு பழுப்பு நிற உடுப்பு அணிந்த துறவி, அவர்களின் முன்னால் பறந்து கொண்டிருந்தார். ‘இது யார்? இது எப்படிச் சாத்தியம்?’ என்று அவர்களுக்குப் புரியவில்லை. சரி, குண்டுகளை வீசி விட்டுப் போவோம் என்று பார்த்தால், இயந்திரங்கள் வேலை செய்ய மறுத்தன. விமானிகளுக்குப் பயம் வந்துவிட்டது. ‘Abort.. Abort’ என்று தாக்குதல் முயற்சியைக் கைவிட்டு, ‘சட்’டென தரையிறங்கினார்கள். சில நாள்களுக்குப் பிறகு விமானிகளில் ஒருவர் கர்கானோ மலை கப்புச்சின் துறவு மடத்துக்குப் போனபோது, வானில் பறந்த பழுப்பு உடுப்புத் துறவி பாத்ரே பியோதான் என்று அடையாளம் கண்டுகொண்டார்.
‘காற்றின் மொழி’
கடவுள் பாத்ரே பியோவுக்குக் கொடுத்திருந்த மற்றொரு சிறப்பு வரம் xenoglossia - அதாவது, ஒருவர் இதுவரை அறிந்திராத மொழிகளில் திடீரென பேசுவது, எழுதுவது. அகோஸ்டினோ என்பவர் பியோவின் ஆன்மிக இயக்குநராக இருந்தார். அவருக்கு 1912-ஆம் ஆண்டு பியோவிடமிருந்து பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. பியோ அதைக் கைப்பட எழுதியிருந்தார். பியோவுக்குக் கிரேக்கமோ, பிரெஞ்சோ தெரியாது என்பது அகோஸ்டினோவுக்குத் தெரியும். எனவே, வியப்புடன், “பாத்ரே பியோ, யார் உங்களுக்குப் பிரெஞ்சு மொழி கற்றுக் கொடுத்தது?” என்று கேட்டார். அதற்குப் பியோ, “உங்களுடைய இந்தக் கேள்விக்கு நான் எரேமியா போலத்தான் பதில் அளிக்க முடியும். ‘என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே!” (எரே 1: 6) என்றாராம்.
‘ஒரு தடவை சொன்னால்...’
பாத்ரே பியோ எதிர்காலம் குறித்துச் சொன்ன வார்த்தைகள் எல்லாம் நிறைவேறின. 1947-ஆம் ஆண்டு கரோல் வொய்த்திவா என்ற ஒரு போலந்து நாட்டு இளம் அருள்பணியாளர் பாத்ரே பியோவை வந்து சந்தித்தார். குருப்பட்டம் வாங்கி ஒரு வருடம் மட்டுமே ஆனவர். அவரிடம் பியோ, “நீ ஒருநாள் திரு அவையின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்படுவாய்” என்று சொன்னார். அது அப்படியே நடந்தது. 1978-ஆம் ஆண்டு திருத்தந்தையாகப் பதவியேற்ற புனித இரண்டாம் ஜான் பால் அவரே.
எல்லாவற்றையும்விட பாத்ரே பியோவின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லப்படும் பின்வரும் குறிப்புதான் என்னை மிகவும் கவர்ந்தது.
பியோவின் குடும்பத்தவர் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கெடுத்தார்கள். தினமும் மாலையில் செபமாலை சொன்னார்கள். கார்மெல் அன்னைக்குப் பொருத்தனையாக வாரத்தில் மூன்று நாள்கள் இறைச்சியைத் தவிர்த்தார்கள். பெற்றோர் கல்வியறிவு அற்றவர்கள் என்றாலும், திருவிவிலியக் கதைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள். இந்தப் பின்புலம்தான் பாத்ரே பியோ என்ற ஒரு மாபெரும் புனிதர் உருவாக ஆதார காரணம்.
எல்லாக் குடும்பங்களும் புனிதத்தின் விளை நிலங்கள் ஆக முடியும்!
(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்)
Comment